AIADMK Rajya Sabha MP Thambidurai: மருத்துவத்துறையில் தி.மு.க. அரசு தோற்றுவிட்டதாக அதிமுக எம்பி தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களைவில் விமர்சித்தார். இதற்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
AIADMK Rajya Sabha MP Thambidurai: மருத்துவத்துறையில் தி.மு.க. அரசு தோற்றுவிட்டதாக அதிமுக எம்பி தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களைவில் விமர்சித்தார். இதற்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Published on: March 18, 2025 at 11:13 pm
புதுடெல்லி, மார்ச் 18 2025: மருத்துவத்துறையில் தி.மு.க அரசு தோற்றுவிட்டதாக அதிமுக எம்பி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் தொடர்பான விவாதம் இன்று (மார்ச் 18 2025) மாநிலங்களவையில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பங்கேற்று பேசினார்.
அப்போது தம்பிதுரை, “நாட்டில் எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இதனை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு சுகாதாரத்துறையில் முன்னிலை பெற்ற மாநிலங்களில் ஒன்றாக இருப்பதாக உறுப்பினர் (தி.மு.க.) தெரிவித்தார். இதற்கு முயற்சிகள் எடுத்தது அ.தி.மு.க. அரசுதான்.
குறிப்பாக ஜெயலலிதா முதல் – அமைச்சராக இருந்த காலத்தில் தொட்டில் குழந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்மூலம் பெண் குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். 2-வதாக “பேபி கேர் கிட்” திட்டத்தைச் சொல்ல வேண்டும். இந்த திட்டத்தில் கர்ப்ப காலத்தில் இருந்தே பெண்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் மருத்துவ காப்பீட்டு திட்டம், அம்மா மருந்தகத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
நீட் தேர்வு
இந்த திட்டங்களை எல்லாம் தி.மு.க. அரசு இல்லாமல் செய்து விட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது 23 புதிய மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன.
மதுரை எய்ம்ஸ் கல்லூரி கூட அப்போதுதான் அறிவிக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு ஒரு மருத்துவக் கல்லூரியை கூட கொண்டு வரவில்லை. தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் கொடுப்பார்கள். ஆனால் எதையும் செய்வதில்லை.
எல்லாவற்றுக்கும் மேலே சொல்ல வேண்டும் என்றால் நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான். அவர்கள் தான் அறிமுகம் செய்தனர். பின்னர் அதனை ரத்து செய்து விடுவதாக தேர்தலின் போது துணை முதல் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார்.
அந்த கையெழுத்து என்ன ஆனது? அவர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள். அ.தி.மு.க. அரசுதான் மருத்துவத்துறையில் பல சாதனைகளை செய்தது. இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். தி.மு.க. அரசு இதில் எந்த உரிமையும் கோர முடியாது. தி.மு.க. அரசு அதில் தோற்றுவிட்டது” என்றார்.
தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு
அப்போது தி.மு.க. எம்.பி.க்கள் அதற்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இதனால் அவையில் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. பிற மாநில உறுப்பினர்கள் இதனை நகைத்தனர். அந்த நேரத்தில் அவைத்தலைவரின் இருக்கையில் தி.மு.க. எம்.பி. வில்சன் அமர்ந்திருந்தார்.
முதலில் அவர் தம்பிதுரையின் பேச்சுக்கள் அவை குறிப்பில் ஏறாது என்று கூறினார். பின்னர் இது போன்ற கருத்துக்களை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தெரிவிக்க வேண்டும் என்றார். ஆனாலும் தம்பித்துரை விடாமல் பேசிக் கொண்டிருக்கவே, அவை நடவடிக்கைகளை மறுநாள் ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: TASMAC scam: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு? மாநிலங்களவையில் பேசிய தம்பி துரை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com