Cyclone Alert: வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல், இன்று நள்ளிரவுக்குள் தீவிரப் புயலாகவும், நாளை அதிதீவிரப் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Cyclone Alert: வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல், இன்று நள்ளிரவுக்குள் தீவிரப் புயலாகவும், நாளை அதிதீவிரப் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Published on: October 26, 2026 at 1:43 pm
சென்னை, அக். 26 2026: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், திங்கள்கிழமை (அக்டோபர் 26) காலை ‘அர்னாப்’ (Arnab) புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் நகர்ந்த இந்தப் புயல், கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
காலை 5.30 மணி நிலவரப்படி, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து சுமார் 590 கி.மீ. வடமேற்கிலும், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இருந்து 650 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கிலும் புயல் மையம் கொண்டிருந்தது. இந்தப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 26-ம் தேதி நள்ளிரவுக்குள் தீவிரப் புயலாகவும், அக்டோபர் 27-ம் தேதி அதிதீவிரப் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகரும் புயல், அக்டோபர் 28-ம் தேதி முற்பகலில் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே அதிதீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்; காற்றின் வேகம் மணிக்கு 140 கி.மீ. வரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் அக்டோபர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 26-ம் தேதி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழையும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீலகிரிக்கு ரெட் அலர்ட்- நிலச்சரிவால் பாதிப்பு; மலைப்பாதைகளைத் தவிர்க்க அறிவுறுத்தல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com