Tamil Growth Among Gen Z: ‘ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது’ என டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.
Tamil Growth Among Gen Z: ‘ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது’ என டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.

Published on: October 13, 2026 at 6:07 pm
Updated on: October 13, 2026 at 6:10 pm
புதுடெல்லி, அக்.13, 2026: தற்போதைய ஜென்ஸி தலைமுறையினரிடமும் தமிழ் மொழி தொடர்ந்து வளர்ந்து வருவதாக டெல்லி கம்பன் கழகம் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற தமிழறிஞர்கள் தெரிவித்தனர்.
டெல்லி லோதி சாலையில் உள்ள ரமண கேந்திரா கலையரங்கில், ‘கணினி தலைமுறையும், கன்னல் தமிழும்’ என்ற தலைப்பில் கடந்த சனிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு டெல்லி கம்பன் கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.வி.கே. பெருமாள் தலைமை வகித்தார். அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தமிழின் பெருமைகளை எடுத்துச் சொல்லி, மொழியின் சிறப்பையும் வளர்ச்சியையும் நிலைநிறுத்துவதே இக்கருத்தரங்கின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.
கருத்தரங்கைத் தொடங்கி வைத்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் இரா. அறவேந்தன் பேசுகையில், முன்பு அச்சு வடிவில் வாசிக்கப்பட்ட இலக்கியங்களை இன்றைய இளைஞர்கள் மின்னணு ஊடகங்கள் வழியாக வாசிப்பதாகவும், டிஜிட்டல் தளங்களில் புதிய படைப்புகளை உருவாக்குவதாகவும் குறிப்பிட்டார். இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் எல்லைகள் விரிவடைவதுடன், மொழியின் வளமும் அதிகரிக்கிறது என்றார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தமிழுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக பேராசிரியர் அறவேந்தன் தெரிவித்தார். தொழில்நுட்ப வளர்ச்சியைத் தமிழ் மொழியின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துவதன் மூலம், இளம் தலைமுறையினரிடம் தமிழைக் கொண்டு சேர்க்க முடியும் என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில், தமிழ் மேடைகளில் மூத்த அறிஞர்களுக்கு உரிய இடம் அளிப்பதுடன், இளைஞர்களுக்கும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தப் போதிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிப் பேராசிரியர் ச. சீனிவாசன், உதவிப் பேராசிரியர் முனைவர் கே. சுரேஷ், டெல்லிப் பல்கலைக்கழக இந்திய மொழிகள் மற்றும் இலக்கியப் புலப் பேராசிரியர் தி. உமாதேவி, காந்திகிராம் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் நா. காளிதாசம்மாள் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். எழுத்தாளரும் வரலாற்றுப் பட இயக்குநருமான முனைவர் ரவி குணவதி மைந்தன், டெல்லித் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் ஜி. சிவபாலமுருகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இத்தகைய கருத்தரங்குகள் தற்போதைய சூழலில் மிகவும் அவசியமானவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
நிறைவுச் சிறப்புரையாற்றிய புதுச்சேரி மாநில குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் வே.பொ. சிவக்கொழுந்து, கம்பனுக்குச் சேவை செய்வதுடன், அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழை, எளிய மக்களின் கல்விக்காகச் செலவிடுவது தனது கொள்கை எனத் தெரிவித்தார். உலகம் முழுவதும் கம்பன் கழகங்கள் உருவாகி தமிழ் மொழியையும் அறத்தையும் வளர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். டெல்லியில் தமிழ்ப்பணி ஆற்றி வரும் கம்பன் கழக நிர்வாகிகளைப் பாராட்டிய அவர், கழகத்தின் பணிகளுக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்தார். நிகழ்ச்சியில் அவருக்குப் பாராட்டுக் கேடயமும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க : ராகுல் காந்தி மனுவில் 10-க்கும் மேற்பட்ட பிழைகள்.. உச்சநீதிமன்றம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com