2026 பிரிக்ஸ் மாநாடு: முக்கிய சாதனைகள் என்ன? இனி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எவை?

BRICS 2026: 2026 பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய சாதனைகள் மற்றும் இனி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து பார்க்கலாம்.

Published on: September 20, 2026 at 8:09 pm

புதுடெல்லி, செப்.20, 2026: இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற 18-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நிறைவடைந்தது. பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 11 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். விரிவடைந்த பிரிக்ஸ் அமைப்பில் மாறுபட்ட அரசியல் மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளைக் கொண்ட நாடுகளை ஒரே கட்டமைப்புக்குள் கொண்டு வருவதில் இந்த மாநாடு முக்கிய சோதனையாக அமைந்தது. மாநாட்டின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக 140 அம்சங்களைக் கொண்ட ‘புதுடெல்லி பிரகடனம்’ மற்றும் மாநாட்டின் இடையே நடைபெற்ற இருதரப்பு சந்திப்புகள் அமைந்தன.

உறுப்பு நாடுகளுக்கு இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவியபோதும், புதுடெல்லி பிரகடனம் ஒருமித்த அணுகுமுறையை உருவாக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக, சர்வதேச மோதல்கள் தொடர்பாக எந்தவொரு நாட்டையும் நேரடியாக குற்றம்சாட்டாமல், அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மொழி பயன்படுத்தப்பட்டது.
அதேநேரத்தில், 2025 ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரகடனத்தில் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2027-ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பு சீனாவுக்கு வழங்கப்படுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2021-ஆம் ஆண்டு இந்தியா பிரிக்ஸ் தலைமை வகித்த காலத்துடன் ஒப்பிடும்போது, 2026-ஆம் ஆண்டின் தலைமைப் பொறுப்பு பல்வேறு வகைகளில் மாறுபட்டதாக இருந்தது. 2021-ல் பிரிக்ஸ் அமைப்பில் 5 நாடுகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 11 உறுப்பினர் நாடுகளுடன் 10 கூட்டாளர் நாடுகளும் இணைந்துள்ளன. இதனால் அமைப்பின் பொருளாதார முக்கியத்துவம் அதிகரித்துள்ளதுடன், ஒருமித்த முடிவுகளை எடுப்பது சிக்கலானதாகவும் மாறியுள்ளது. கொரோனா பெருந்தொற்று மற்றும் இந்தியா-சீனா எல்லைப் பதற்றம் நிலவிய சூழலில் 2021 மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. ஆனால், 2026-ல் இந்தியா 30 நகரங்களில் 350-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண் சூழலியல், ஃபின்டெக், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவும் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் பிரிக்ஸ் நாடுகளுடனான வர்த்தகம் 2020-21-ல் 203 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், 2025-26-ல் 417 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு சுங்கத்துறை ஒத்துழைப்பு, வர்த்தக நிதி, விநியோகச் சங்கிலிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, உறுப்பு நாடுகளின் தேசிய நாணயங்களில் எல்லை தாண்டிய வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. பிரிக்ஸ் கட்டணப் பணிக்குழு, நாடுகளின் விரைவான பணப்பரிவர்த்தனை அமைப்புகளை இணைப்பது மற்றும் மத்திய வங்கிகளின் டிஜிட்டல் நாணயங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை ஆராய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

எனினும், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே தேசிய நாணயங்களில் வர்த்தகம் செய்வதற்கான முழுமையான செயல்பாட்டு அமைப்பு இதுவரை உருவாகவில்லை. பொதுவான தொழில்நுட்ப கட்டமைப்பு, ஒரே மாதிரியான பரிவர்த்தனை முறைகள் அல்லது ‘பிரிக்ஸ் பே’ எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண தளத்தை தொடங்குவதற்கான இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு மாற்று விகித நடைமுறைகள், மூலதனக் கட்டுப்பாடுகள், வங்கித் துறை விதிமுறைகள், பொருளாதாரத் தடைகளின் தாக்கம் மற்றும் பணப்பரிவர்த்தனை தரநிலைகள் உள்ளதால் ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்குவது சவாலாக உள்ளது. மேலும், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் சமச்சீரற்ற நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்தியாவின் 2026-ஆம் ஆண்டு தலைமையின் கீழ் முன்வைக்கப்பட்ட வர்த்தகம், வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான முயற்சிகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கட்டண அமைப்புகளின் ஒருங்கிணைப்பு, குறு-சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிதி, முதலீட்டு அறிவிப்புகள் மற்றும் இருதரப்பு வளர்ச்சித் திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகின்றன என்பது பிரிக்ஸ் அமைப்பின் அடுத்தகட்ட செயல்பாட்டுக்கு முக்கியமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் முடக்கம்.. உச்ச நீதிமன்றத்தை நாடிய மம்தா பானர்ஜி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com