Rashmika Mandanna: ‘எல்லா மொழிகளையும் என்னுடையதாகவே கருதுகிறேன்’ என ரசிகர்களை மதிப்பது குறித்து ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
Rashmika Mandanna: ‘எல்லா மொழிகளையும் என்னுடையதாகவே கருதுகிறேன்’ என ரசிகர்களை மதிப்பது குறித்து ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

Published on: September 19, 2026 at 1:04 pm
சென்னை, செப்.19, 2026: தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணம் திட்டமிட்டு உருவானது அல்ல என்றும், இயல்பாகவே பல மொழிகளில் வாய்ப்புகள் அமைந்ததால் இந்தப் பயணம் உருவானது என்றும் தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மொழி தனது திரைப்படப் பயணத்திற்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது தாய்மொழி மற்றும் பின்னணி குறித்து பேசிய ராஷ்மிகா, தான் கொடவா சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், கொடவா தக் மொழியைப் பேசுவதாகவும் தெரிவித்தார். ஆனால், அந்த மொழியில் தனித்துவமான திரைப்படத் துறை இல்லாததால், மொழி தனது சினிமா வாழ்க்கையில் ஒரு தடையாக இருந்ததில்லை என்று அவர் குறிப்பிட்டார். மேலும், அனைத்து மொழிகளையும் தன்னுடைய சொந்த மொழிகளைப் போலவே பார்ப்பதாகவும் ராஷ்மிகா கூறியுள்ளார்.
தனது ரசிகர்களை “குடும்பம்” என்று அழைக்கும் ராஷ்மிகா, வெவ்வேறு மொழிகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் தனது ரசிகர்களே தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார். முதலில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்குமாறு ரசிகர்கள் கூறியதாகவும், பின்னர் இந்தி திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர்கள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இதன் மூலமாகவே தனது திரைப்பயணம் படிப்படியாக பல்வேறு மொழிகளுக்கு விரிவடைந்ததாகவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு மொழிகளில் பேசும்போது தனது உச்சரிப்பு குறித்து வரும் விமர்சனங்கள் பற்றியும் ராஷ்மிகா பதிலளித்துள்ளார். குறிப்பிட்ட ஒரு மொழியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தன்னால் பதிலளிக்க முடியும் வரை அது தனக்கு போதுமானது என்றும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தனது ரசிகர்களை அந்த வகையில் மதிப்பதாகவும் அவர் கூறினார். “நான் எல்லாவற்றிலும் கொஞ்சம் தெரிந்தவர்; ஆனால் எந்த ஒன்றிலும் முழுமையான நிபுணர் அல்ல” என்ற பொருளில், தன்னை “Jack of all trades, master of none” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படங்களில் தனது உச்சரிப்பு குறித்து தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் பேச்சுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார். ஒரு நடிகையாக தனது பணி நல்ல கதைகளை உருவாக்குவதிலும், தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்வதிலும் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார். படப்பிடிப்பில் தன்னுடன் பணியாற்றும் மற்றவர்களின் பணியில் தலையிடாமல், தனது சிறந்த நடிப்பை வழங்குவதிலேயே கவனம் செலுத்துவதாகவும், ஒவ்வொரு திரைப்படத்திலும் படக்குழுவினர் அனைவரின் கூட்டு முயற்சியால் ஒரு சிறந்த படைப்பு உருவாகும் என நம்புவதாகவும் ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ‘ஜெயிலர் 2’மிரட்டலான தோற்றத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு.. ‘திலீப்’ கதாபாத்திரம் அறிமுகம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com