ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. தேசிய கொடி ஏந்திச் செல்பவர்கள் யார்? முதல் பதக்கம் உறுதி!

Asian Games 2026: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் இந்திய கொடியேந்திகளாக மனு பாக்கர், தஜிந்தர்பால் சிங் தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Published on: September 19, 2026 at 12:55 pm

டோக்கியோ, செப். 19 2026: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் இந்தியாவின் கொடியேந்திகளாக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 19ஆம் தேதி ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறும் தொடக்க விழாவில் இருவரும் இந்திய அணியை வழிநடத்தி தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளனர். மனு பாக்கரின் தேர்வை இந்திய அணியின் தலைமைப் பொறுப்பாளர் சஹ்தேவ் யாதவ் அறிவித்த நிலையில், தஜிந்தர்பால் சிங் தூர் கொடியேந்தியாக தேர்வு செய்யப்பட்டதை இந்திய தடகள சம்மேளனம் உறுதி செய்துள்ளது.

மனு பாக்கர், 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஒரே பதிப்பில் இரண்டு பதக்கங்களை வென்றதன் மூலம் வரலாறு படைத்தார். சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் மனு பாக்கர், தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியாவுக்கான முக்கிய பதக்க நம்பிக்கைகளில் ஒருவராக உள்ளார்.

மறுபுறம், தஜிந்தர்பால் சிங் தூர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்களில் ஒருவராக உள்ளார். கடந்த இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஆடவர் குண்டு எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அவர், தற்போது மூன்றாவது முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் இலக்குடன் களமிறங்குகிறார். இதனால், மனு பாக்கர் மற்றும் தஜிந்தர்பால் சிங் தூர் இருவரும் இந்தத் தொடரில் இந்தியாவின் முக்கிய பதக்க வாய்ப்புகளாக கருதப்படுகின்றனர். காயம் காரணமாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா போட்டியில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

இதனிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடங்குவதற்கு முன்பே டெக்பால் விளையாட்டில் இந்தியாவுக்கு வரலாற்றுச் சாதனைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 24 வயதான க்விம்சி டிசோசா, ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் டெக்பால் முதன்முறையாக இடம்பெற்றுள்ள நிலையில், தொடக்க ஆட்டத்தில் ஜப்பானின் யுயினா சகாமோட்டோவுக்கு எதிராக கடுமையாகப் போராடி வெற்றி பெற்ற டிசோசா, அடுத்த ஆட்டத்தில் கோம்யான் டி-யை எளிதாக வீழ்த்தி தனது பிரிவில் முதலிடத்தை உறுதி செய்தார்.

இதன் மூலம் டிசோசா சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் இந்தோனேசியாவின் சுமயாவை எதிர்கொள்ள உள்ளார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் டெக்பால் பிரிவில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் உறுதி செய்யப்படும். அரையிறுதியில் தோல்வியடைந்தாலும், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட அவருக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. அந்தப் போட்டியில் மியான்மரின் வை கின் ஹின் மற்றும் லெபனானின் கமர் டண்டால் ஆகியோருக்கு இடையிலான மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடையும் வீராங்கனையை டிசோசா எதிர்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : செஸ் ஒலிம்பியாட் தடுமாற்றம்.. 2700 ரேட்டிங்கை இழந்த குகேஷ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com