CV Shanmugam: “தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதை விட த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கலாம் என நாங்கள் கூறினோம்” என சி.வி சண்முகம் கூறியுள்ளார்.
CV Shanmugam: “தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதை விட த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கலாம் என நாங்கள் கூறினோம்” என சி.வி சண்முகம் கூறியுள்ளார்.

Published on: August 10, 2026 at 5:27 pm
சென்னை, ஆக.10, 206: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் நத்தம் விஸ்வநாதன், கட்சியின் தேர்தல் தோல்வி குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சண்முகம், “அதிமுக தோல்விக்கு நிர்வாகிகள் மீது பழி சுமத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என வலியுறுத்தினார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி தவறான தகவல்களை திட்டமிட்டு பரப்பி வருவதாகவும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக நியமித்தது அனைவரும் ஒன்றிணைந்த முடிவாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சண்முகம் மேலும், “சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்றது எடப்பாடி பழனிசாமியின் சொந்த செல்வாக்கால் தான் என்கிறார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. அப்படியானால், மற்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி செல்லாக்காசா? வெற்றி பெற்றால் பழனிசாமி காரணம், தோல்வி அடைந்தால் மாவட்டச் செயலாளர்கள் காரணம் என்பதா?” என கேள்வி எழுப்பினார். சென்னை, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கட்சி முற்றிலும் தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.
அவர் மேலும், “திமுகவுடன் கூட்டணி அமைப்பதை விட தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கலாம் என்று நாங்கள்தான் கூறினோம். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு விழுப்புரம் மாவட்டத்திற்கு கட்சி சார்பில் ஏதேனும் நிதி வழங்கப்பட்டதா? காழ்ப்புணர்ச்சியால் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தினார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது ஏற்பட்ட சர்ச்சையை நினைவுபடுத்திய அவர், “அவர் இன்று எங்களைப் பற்றி பேசலாமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “நாங்கள் யாரையும் குற்றம் சாட்டவில்லை. கட்சியில் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். வெளியேறியவர்களையும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும்” என்றார். அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தாக்குவது எங்களது நோக்கம் அல்ல என்றும், எடப்பாடி பழனிசாமி அவரது கருத்துகளை தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றும் அவர் கூறினார்.
விஸ்வநாதன் மேலும், “தேர்தல் தோல்வியை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார். 1996 ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு தானே பொறுப்பு என்று ஜெயலலிதா தைரியமாகக் கூறினார். ஆனால் இன்று அதே நிலையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை” என விமர்சித்தார்.
அவர், “ஒரு காலத்தில் அதிமுகவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து 50 உறுப்பினர்கள் இருந்தனர். அந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவிட்டது. 2021 தேர்தலில் 65 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த அதிமுக, தற்போது 47 ஆகக் குறைந்துள்ளது” என குறிப்பிட்டார்.
முடிவாக, “எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழித்துக்கொண்டே வருகிறார்” என நத்தம் விஸ்வநாதன் கடுமையாக விமர்சித்தார். முன்னாள் அமைச்சர்களின் இந்தக் கருத்துகள், அதிமுக உள்கட்சிப் பிரச்சினைகள் மற்றும் தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் எதிர்கால பாதையைப் பற்றி தீவிரமான விவாதத்தை உருவாக்கியுள்ளன.
இதையும் படிங்க : தேர்தல் வாக்குறுதி ஒன்று, செய்வது வேறொன்றா? த.வெ.க அரசுக்கு டி.டி.வி தினகரன் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com