Anbumani Ramadoss: “16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Anbumani Ramadoss: “16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Published on: July 27, 2026 at 11:03 am
சென்னை, ஜூலை 27, 2026: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26, 2026) விடுத்துள்ள அறிக்கையில், “15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளின் உடல் நலன், மனநலம் ஆகியவை சார்ந்து பார்க்கும் போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் ஒன்றான இந்தியாவும் இத்தகைய தடையை முன்னெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர், “பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் தடை வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும். இந்த சட்டத்தின்படி வரும் செப்டம்பர் மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்குகளைத் தொடங்க முடியாது. ஏற்கனவே தொடங்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகள் ஜனவரி முதல் முடக்கப்படும். ஐரோப்பிய யூனியனில் இத்தகைய தடையை கொண்டு வந்துள்ள முதல் நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அடிமையான பிறகு விளையாடும் வழக்கம் குறைந்துவிட்டது. கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளை குழந்தைகள் மறந்து விட்டனர். ஆன்லைன் விளையாட்டுகளை மட்டுமே அவர்கள் விளையாட்டாக கருதுகின்றனர். இதனால் உடல் பருமன், விட்டமின்& டி குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இந்த பாதிப்புகளிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால் சமூக ஊடகங்களுக்கு தடை விதிப்பது தான் தீர்வாகும்.
கர்நாடகம், ஆந்திரம், கோவா ஆகிய மாநிலங்கள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை தடை செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. ஆனால், அதை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை எந்த மாநில அரசும் மேற்கொள்ளவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை. இந்தியாவில் தொலைத்தொடர்பு (Communication) என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மத்தியப் பட்டியலில் 31&ஆம் பொருளாக இடம் பெற்றுள்ளது. அதனால், மாநிலப் பட்டியலில் உள்ள பொது சுகாதாரம், குழந்தைகள் நலன் ஆகிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு மாநில அரசுகள் தடை விதித்தாலும் அவை சட்டவிரோதமானவை என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும் வாய்ப்புள்ளது.
குழந்தைகளின் உடல் நலன், மன நலம், கல்வி, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களை சமூக ஊடங்களின் பிடியில் இருந்து மீட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை பின்பற்றி இந்தியாவில் 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தெற்கு மண்டல கவுன்சிலுக்கு தமிழக பிரதிநிதிகள் அறிவிப்பு! அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் நியமனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com