Supreme Court of India: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அவர் ஏழை என்பதால் மருத்துவ சிகிச்சையை புறக்கணித்து விட்டீர்களா? என உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
Supreme Court of India: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அவர் ஏழை என்பதால் மருத்துவ சிகிச்சையை புறக்கணித்து விட்டீர்களா? என உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

Published on: July 17, 2026 at 5:58 pm
Updated on: July 17, 2026 at 6:24 pm
புதுடெல்லி, ஜூலை 17, 2026: உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில், மருத்துவ உதவி வழங்கத் தவறியதாகக் கூறப்படும் தனியார் ஆயுர்வேத மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்தச் சிறுமி புறக்கணிக்கப்பட்டாரா என்ற கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பியது.
நீதிபதிகள் சூர்யா காந்த், ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா அடங்கிய அமர்வு, மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் மனிதாபிமானமற்ற அணுகுமுறையை கடுமையாகச் சாடியது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது. “உங்கள் கடமையைச் செய்யவில்லை என்றால், உங்கள் பெயருடன் ‘மருத்துவர்’ என்று குறிப்பிடுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை” என்று தலைமை நீதிபதி கடுமையாகக் கூறியதாக ‘லைவ் லா’ செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் மாதம் நடந்த இந்தச் சம்பவத்தில், சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படும் ஆயுர்வேத மருத்துவரையும் நீதிமன்றம் கண்டித்தது. “ஒரு சிறுமி உங்கள் முன் கொண்டு வரப்பட்டார், ஆனால் நீங்கள் மருத்துவ சிகிச்சை அளிக்காத அளவுக்கு இரக்கமற்றவராக இருந்தீர்கள்” என்று நீதிபதி நேரடியாகக் கூறினார். அதேபோல, சிறுமி அழைத்துச் செல்லப்பட்ட தனியார் மருத்துவமனையின் செயல்பாடும் “மிகவும் இரக்கமற்றதாக” இருந்ததாகக் கூறி அதையும் கண்டனம் தெரிவித்தது.
சிறுமி சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அண்டை வீட்டாரால் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சுயநினைவற்ற நிலையில் ரத்தக் கறையுடன் கண்டெடுக்கப்பட்டார். இரண்டு தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுத்ததால், மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்பே அவர் உயிரிழந்ததாக புகார் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படாவிட்டால், அபராதம் விதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்தச் சம்பவம் மருத்துவ சேவைகளின் மனிதாபிமானம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதோடு, ஏழை மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகிறதா என்ற சமூக அக்கறையையும் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க : நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. இதன் சிறப்புகள் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com