Anbumani Ramadoss: நான் முதல்வன் திட்டம் படுதோல்வி என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
Anbumani Ramadoss: நான் முதல்வன் திட்டம் படுதோல்வி என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
Published on: July 12, 2025 at 8:18 pm
சென்னை, ஜூலை 12 2025: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கப்போவதாகக் கூறி தமிழக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சிக்காக சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து வருவதாகவும், பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டிய திறன் மேம்பாட்டுத் திட்டம் மாணவர்களால் விரும்பப்படாத திட்டமாக மாறி வருவதற்கு அரசின் பொறுப்பின்மை தான் காரணமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு போதிய அளவில் வேலை கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அவ்வாறு பணியில் சேர்ந்தவர்களும் அதில் நீடிப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மை. நான் முதல்வன் திட்டத்தின்படி பணியில் சேர்பவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.500 என்ற விகிதத்தில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.
பணியில் சேருபவர்களில் பெரும்பான்மையினர் தங்களின் சொந்த ஊரை விட்டு வந்து வெளியூரில் தங்கி தான் இந்தப் பணியை செய்ய வேண்டியிருப்பதால், அவர்களுக்கு இந்த ஊதியம் போதுமானதாக இல்லை. அதனால், அவர்கள் வேலையை உதறுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “எந்த வகையில் பார்த்தாலும் திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்குவதற்கான நான் முதல்வன் திட்டம் வெற்றிகரமானதாக இல்லை. இன்றைய தேவைக்கு ஏற்ற பயிற்சிகள் அளிக்கப்படாததும், மிகக் குறைந்த ஊதியத்தில் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவதும் தான் இதற்கு காரணமாகும். நான் முதல்வன் திட்டத்திற்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை கூட, அத்திட்டத்தை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில் திமுக அரசு காட்டவில்லை. அடுத்து அமையவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சியில், திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மிகச் சிறப்பான முறையில் கனவுத் திட்டமாக உருவாக்கி இளைஞர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்துவோம் என உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ‘உங்களுடன் ஸ்டாலின்’ ஊரை ஏமாற்றும் திட்டம்; அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com