Dr Ramadoss: நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல; மத்திய, மாநில அரசுகள் இணைந்து குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.3,500 வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Dr Ramadoss: நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல; மத்திய, மாநில அரசுகள் இணைந்து குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.3,500 வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Published on: May 29, 2025 at 12:12 pm
Updated on: May 29, 2025 at 12:13 pm
சென்னை, மே 29 2025: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “2024-25ஆம் ஆண்டில் சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2369 ஆகவும் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ.2389 ஆகவும் உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
2024-25ஆம் ஆண்டில் இந்த நெல் வகைகளுக்கு முறையே ரூ.2300, ரூ. 2320 கொள்முதல் விலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் குவிண்டாலுக்கு வெறும் ரூ.69, அதாவது 3% மட்டும் உயர்த்துவது போதுமானது அல்ல” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.1579 என்பதை அடிப்படையாக வைத்து, அதனுடன் 50% லாபம் சேர்த்து இந்த விலையை மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது. உற்பத்திச் செலவை கணக்கிடுவதற்காக மத்திய அரசு கடைபிடிக்கும் நடைமுறை தவறு என்பது தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்ய ரூ.2300 செலவாவதாக உழவர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், அதே அளவுக்கு கொள்முதல் விலையும் நிர்ணயிக்கப்பட்டால் உழவர்களுக்கு லாபமே கிடைக்காது. வட்டிக்கு கடன் வாங்கி வேளாண்மை செய்யும் உழவர்கள், போதிய லாபம் கிடைக்காவிட்டால் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “நெல்லுக்கான கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் போது உழவர்கள் நலனை மத்திய அரசு கருத்தில் கொள்வதில்லை என்பதைப் போலவே, கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை நிர்ணயிப்பதில் தமிழக அரசும் துரோகம் செய்கிறது. கடந்த ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு சாதாரண வகைக்கு ரூ.105, சன்ன வகைக்கு ரூ.120 மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. இதைக் கொண்டு உழவர்களின் துயரத்தைத் துடைக்க முடியாது.
பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் ஒதிஷாவில் குவிண்டாலுக்கு ரூ.800 வீதமும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் தெலுங்கானத்தில் குவிண்டாலுக்கு ரூ.500 வீதமும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல், தமிழக அரசும் குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.800 முதல் ரூ.1000 வரை ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அதேபோல், மத்திய அரசிடமும் பேச்சு நடத்தி, ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500 வீதம் கொள்முதல் விலை வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : திமுக வேட்பாளர் பட்டியல்.. பி வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு; வைகோவுக்கு கல்தா.. கமல்ஹாசன் நிலை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com