Anbumani Ramadoss: “107-ஆம் நாளாக போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களுக்கு உணவு வழங்குவதாக திமுக மார்தட்டுவது கொடூரமான நகைச்சுவை” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: “107-ஆம் நாளாக போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களுக்கு உணவு வழங்குவதாக திமுக மார்தட்டுவது கொடூரமான நகைச்சுவை” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: November 16, 2025 at 11:25 am
சென்னை, நவ.16, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை (நவ.15, 2025) விடுத்துள்ள அறிக்கையில், “திமுக அரசு செய்த நம்பிக்கை துரோகத்தால் பல்லாயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வாடிக் கொண்டிருக்கும் நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதல் செயல்படுத்துவதாக நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக அரசின் இந்த நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்குங்கள்; சென்னை மாநகரப் பகுதிகளில் குப்பை அள்ளும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்காமல் மாநகராட்சி வாயிலாகவே மேற்கொள்ளச் செய்யுங்கள் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை மாநகராட்சி அருகில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். 12 நாள்களாக அவர்களின் போராட்டம் நீடித்த நிலையில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசு, ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து அவர்களை கைது செய்தும், விரட்டியடித்தும் போராட்டத்தை சிதைக்க முயன்றது.
திமுக அரசின் அடக்குமுறைகளையும் கடந்து, எதற்கும் அஞ்சாமல் தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். அவர்களின் போராட்டம் இன்று 107-ஆம் நாளை எட்டியிருக்கிறது. ஆனால், இன்று வரை தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு கூட முன்வரவில்லை. அதற்கு காரணம் இராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் குப்பை அள்ளும் பணிக்கான ரூ.2300 கோடி ஒப்பந்ததை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதன் மூலம் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயங்களை இழக்க ஆட்சியாளர்கள் விரும்பாதது தான்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆந்திராவுக்கு சென்ற ரூ.1720 கோடி முதலீடு.. எத்தனைக் காலம் தான் ஏமாற்றும் திமுக அரசு? அன்புமணி
உணவு வழங்கும் நாடகம்
தொடர்ந்து, “ தூய்மைப் பணியாளர்களுக்கு இழைத்த துரோகத்தை மறைப்பதற்காக அவர்களுக்கு உணவு வழங்கும் நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றியிருக்கிறது. ஏற்கனவே, திமுகவைச் சேர்ந்த சிலரை தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதலமைச்சரை சந்திக்க வைத்து திமுக அரசின் நலத்திட்டங்களை தூய்மைப் பணியாளர்கள் வரவேற்பதைப் போன்ற புளித்துப் போன நாடகத்தை அரங்கேற்றிய ஆட்சியாளர்கள், இப்போது அடுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நன்றாக உழைக்கும் ஒருவரின் கைகளையும், கால்களையும் உடைத்து விட்டு, அவனுக்கு சக்கர நாற்காலியைக் கொடுத்து அதை சாதனையாகக் காட்டிக் கொள்வது எந்த அளவுக்கு கீழ்த்தரமானதோ, அதே போன்றது தான் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பறித்து விட்டு, அவர்களுக்கு இலவச உணவு வழங்குவதாகக் கூறுவதும். இந்தக் கொடூரமான நகைச்சுவையை மக்கள் ரசிக்க மாட்டார்கள்.
தூய்மைப் பணியாளர்கள் கோருவதைப் போல அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டு, அதற்கான ஊதியமும் வழங்கப்பட்டால் , அவர்கள் இலவச உணவுக்காக கையேந்தி நிற்கத் தேவையில்லை. அவர்கள் சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து வாழ்வார்கள். எனவே, இத்தகைய நாடகங்களை நடத்துவதை விடுத்து 107 நாள்களாக போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேசி, அவர்களிம் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் அதிகாரி முன்னிலையில் பாமக நிர்வாகியின் கழுத்தை அறுத்த ரவுடிகள்: இது தான் சட்டம் – ஒழுங்கை காக்கும் லட்சனமா? அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com