Anbumani Ramadoss: தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரூ.1720 கோடிக்கு முதலீடு சென்றதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரூ.1720 கோடிக்கு முதலீடு சென்றதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 15, 2025 at 7:28 pm
சென்னை, நவ.15, 2025: தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரூ.1720 கோடிக்கு முதலீடு சென்றதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ரூ.1720 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த Hwaseung Enterprise நிறுவனம் இப்போது அதை ரத்து செய்து விட்டு, ஆந்திராவில் தொழிறாலை அமைக்க முதலீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிவதாக திமுக அரசு நடத்தி வந்த பொய்பரப்புரையின் முகமூடி இதன் மூலம் கிழிக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Hwaseung Enterprise நிறுவனம் கையெழுத்திட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த சில மாதங்களில் இந்த நிறுவனம் தமிழ்நாட்டை புறக்கணித்து விட்டு ஆந்திராவுக்கு சென்றுள்ளது.
ஆந்திராவில் இந்த நிறுவனம் மொத்தம் 3 கட்டங்களாக 898 கோடி முதலீடு செய்யவுள்ளது. அதன் மூலம் 17,645 பேருக்கு வேலை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆந்திர அரசும், இந்த நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு குப்பம் பகுதியில் 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து ஆந்திர அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டை விட ஆந்திரா தொழில் தொடங்க சிறந்த மாநிலம் என்பதால் அங்கு சென்றிருப்பதாக Hwaseung Enterprise கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள ரூ.11.32 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 10% கூட முதலீடாக மாறவில்லை என்றும், 80% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்கம் பெற்று விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி இராஜா அவர்களும் கூறி வருவது பொய் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறி வந்தது. அது உண்மை என்பது இதன் மூலம் நிரூபனமாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “தமிழ்நாடு தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலமாக இல்லை என்பதற்கு கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வரவிருந்த ரூ.8000 கோடி முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதும், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் புதிய முதலீடுகளை செய்வதாக உறுதியளிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்திருப்பதும் தான் சான்றுகள் ஆகும். இதை உறுதி செய்வதற்கான புதிய சான்றாக Hwaseung Enterprise நிறுவனத்தின் அறிவிப்பு அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நிறுவனங்கள் முன்வராததற்கு காரணம் இங்கு நிலவும் ஊழல்கள் தான். தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் தொடங்கி, நிலம் ஒதுக்கீடு செய்வது வரை அனைத்துக்கும் பெருந்தொகையை கையூட்டாக வழங்க வேண்டியிருப்பதாக நிறுவனங்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டுக்கு ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து விட்டோம்; அதன் மூலம் 34 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து விட்டது என்றெல்லாம் திமுக கூறி வந்தது பொய் என்பது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாட்டு மக்களை நீண்ட காலத்திற்கு ஏமாற்ற முடியாது என்பதை திமுக உணர்ந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : காவல் நிலையத்தில் அதிகாரி முன்னிலையில் பாமக நிர்வாகியின் கழுத்தை அறுத்த ரவுடிகள்: இது தான் சட்டம் – ஒழுங்கை காக்கும் லட்சனமா? அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com