Anbumani Ramadoss: ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
Anbumani Ramadoss: ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

Published on: November 19, 2025 at 11:52 am
Updated on: November 19, 2025 at 11:53 am
சென்னை, நவ.19, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (நவ.19, 2025) விடுத்துள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவி ஷாலினி அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற மனித மிருகத்தால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவி ஷாலினியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஷாலினியை அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பவர் தம்மை காதலிக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், அவரைக் காதலிக்க ஷாலினி மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த முனியராஜ், இன்று காலை மாணவி ஷாலினி பள்ளிக்கு செல்லும் வழியில் மறித்து கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கிறார்.
பள்ளி செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் இளம்பெண்களும் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதாலும், காதல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவதாலும் பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் பேருந்து நிறுத்தங்களிலும், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செவிமடுக்க திமுக அரசு தவறியதன் விளைவாகத் தான் ஓர் அப்பாவி மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
இதையும் படிங்க : சிப்காட் என்ற பெயரில் கடலூரை நச்சுக்காடாக மாற்றுவதா? அன்புமணி ராமதாஸ்
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் நிலவி வருகிறது. ஆளுங்கட்சியினருக்கு துணை போகும் சமூக விரோதிகள் மட்டும் தான் இந்த ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். திமுக ஆட்சியில் எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல் தான் இத்தகைய கொலைகளுக்கு காரணம் ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்; அவர்களில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 60.66 விழுக்காடும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன. இது தான் திமுக ஆட்சியின் சாதனை ஆகும்.
இராமேஸ்வரத்தில் மாணவி ஷாலினியை கொடூரமாக படுகொலை செய்த முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். திமுக ஆட்சியின் எஞ்சியுள்ள சில வாரங்களிலாவது பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை.. கருத்துக் கேட்புக்கு விலக்கு அளிப்பதா? அன்புமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com