Anbumani Ramadoss | “சர்வதேச மெத்தபெட்டமைன் போதைப்பொருள்
கடத்தலின் மையமாக மாறி வரும் தமிழ்நாடு” என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Anbumani Ramadoss | “சர்வதேச மெத்தபெட்டமைன் போதைப்பொருள்
கடத்தலின் மையமாக மாறி வரும் தமிழ்நாடு” என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Published on: September 10, 2024 at 11:46 am
Anbumani Ramadoss | பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “உலக அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள் சூடோபெட்ரின் கடத்தலின் மையமாக தமிழ்நாடு மாறி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழ்நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு கடத்தப்படும் போதைப்பொருட்களின் அளவும், தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களின் அளவும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக மத்திய அரசின் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளின் அளவு கடந்த 2021-ஆம் ஆண்டில் 12 கிலோ என்ற அளவில் இருந்ததாகவும், இது 2022-ஆம் ஆண்டில் 66 கிலோவாகவும், 2023-ஆம் ஆண்டில் 81 கிலோவாகவும் அதிகரித்திருப்பதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளை மேற்கோள்காட்டி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது
2024-ஆம் ஆண்டில் இதுவரை மட்டும் 57 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேநிலை தொடர்ந்தால், நடப்பாண்டில் பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களின் அளவு 100 கிலோவைத் தொடும் வாய்ப்பு உள்ளது.
சென்னையிலிருந்து தான் இலங்கை, தாய்லாந்து, மலேஷியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு மெத்தபெட்டமைன் கடத்தப்படுகிறது. தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு சிறப்பாக செயல்பட்டால் இந்த வகைப் போதைப்பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை தடுக்க முடியும்.
ஆனால், தமிழக அரசு போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, போதைப்பொருள்கள் கடத்தலில் தொடர்புடையவர்களுக்கு பதவி கொடுத்து தமிழக ஆளுங்கட்சி அழகு பார்க்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளாக, குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்த 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் போதைப்பொருள் கடத்தல் 7 மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதால் அதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தலும், நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் இளைய தலைமுறையினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதையும், தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ‘தி.மு.க.வின் பி டீம் விஜய்’; அர்ஜூன் சம்பத்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com