பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்.. தொண்டர்களுக்கு அன்புமணி மடல்!

Doctor Anbumani Ramadoss: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு புகழ் சேர்க்கும் வகையில், “பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்” என தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் மடல் எழுதியுள்ளார்.

Published on: April 12, 2025 at 10:52 pm

Updated on: April 12, 2025 at 10:57 pm

சென்னை, ஏப்.12 2025: பாட்டாளி சொந்தங்களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த மடலில்,

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல்.

பா.ம.க உருவாக்கம்

ஊமை சனங்களுக்கு சமூகநீதியும், அரசியல் அதிகாரமும் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே 1989&ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் சென்னை சீரணி அரங்கில் இனக் காவலர் மருத்துவர் ராமதாஸால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும்.

அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் மருத்துவர் ராமதாஸ் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.

இரு இலக்குகள்

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன்.

எனது பணிகளுக்கு பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன். நம்முன் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய இரு இலக்குகள் உள்ளன. முதலாவது, வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது. இரண்டாவது, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த காலங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று நமது வலிமையை நிலை நிறுத்துவது.

மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு

மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய மருத்துவர் அய்யா அவர்கள், அதற்காக மாநாட்டுக்குழு தலைவராக என்னை நியமித்திருக்கிறார்.

மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இட்ட இந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் திட்டமிடப்பட்டவாறு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளையும் நான் ஒருங்கிணைத்து வருகிறேன். அதே போல் மாநாட்டுக்கு பாட்டாளி சொந்தங்களை அழைத்து வருவதற்கான களப்பணிகளை அனைத்து நிலை நிர்வாகிகளும் தொடர்ந்து முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன்..

2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை மருத்துவர் ராமதாஸ் அவர்களது வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும். அந்தக் கடமையை அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் சரியான நேரத்தில் செய்து முடிப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் அது தான் என் தலையாய பணியாகும்.

மாநாட்டுப் பணிகளையும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளையும் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களத்தில் மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன்… அரசியல் களத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை. அதற்காக உங்களை சந்திக்க விரைவில் உங்களை தேடி வருவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பா.ம.க கட்சியில் தற்போது உள்கட்சி பிரச்னை ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக இருந்த அன்புமணி சில நாள்களுக்கு முன்பு, செயல் தலைவராக பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸால் பதவி குறைப்பு செய்யப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க :புதிய கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்..? உருவாகிறதா எம்ஜிஆர் அதிமுக?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com