Anbumani Ramadoss | “மக்கள் வசதிக்காக என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு தனியார் பேருந்த்களை அரசின் சார்பில் இயக்குவதை அனுமதிக்க முடியாது” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss | “மக்கள் வசதிக்காக என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு தனியார் பேருந்த்களை அரசின் சார்பில் இயக்குவதை அனுமதிக்க முடியாது” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Published on: October 22, 2024 at 6:28 pm
Anbumani Ramadoss | பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தீப ஒளி திருநாளுக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தனியார் பேருந்துகளுக்கு கி.மீக்கு ரூ.51.25 வீதம் வாடகை வழங்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார். இது மிகவும் ஆபத்தான முயற்சி. தனியார் மயத்துக்கு வழிவகுக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “விடுமுறைகள் மற்றும் திருவிழாக் காலங்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் தேவைக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காக தனியார் பேருந்துகளை பயன்படுத்தப்போவதாக தமிழக அரசு கடந்த மாதமே அறிவித்திருந்தது. அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதிஒ இறுதி செய்யப்படுவதாக இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே இந்தத் திட்டத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன்.
ஆனால், தொழிலாளர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் ஆயுத பூஜை விடுமுறையின் போது தனியார் பேருந்துகளை குறைந்த எண்ணிக்கையில் வாடகைக்கு எடுத்து இயக்கிய அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், இப்போது தீப ஒளிக்காக அதிக எண்ணிக்கையில் தனியார் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
மக்கள் வசதிக்காக என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு தனியார் பேருந்த்களை அரசின் சார்பில் இயக்குவதை அனுமதிக்க முடியாது. நெரிசல் காலங்களில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆனால், அதற்குத் தேவையான பேருந்துகள் அரசிடம் இல்லை என்பதால், தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து இயக்கப்படும். அந்த பேருந்துகளை தனியார் நிறுவனத்தின் ஓட்டுனரே இயக்குவார்.
அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துனர் மட்டும் அதில் பணியாற்றுவார்.தனியார் பேருந்துகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில், ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும், இதை தனியார்மயம் என்று கூற முடியாது என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்குக் கூட புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பாமல் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஒப்பந்தப் பணியாளர்களை மட்டும் அரசு நியமித்திருக்கிறது.
இவை அனைத்தும் தனியார்மயமாக்கத்திற்கான முன்னேற்பாடுகள் தான். மிகக்குறைந்த எண்ணிக்கையில் புதிய பேருந்துகளை வாங்குவதையும், சில நூறு பணியாளர்களை மட்டும் நியமிப்பதையும் சுட்டிக்காட்டி அரசுப் போக்குவரத்துக் கழங்கள் தனியார்மயமாக்கப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறுவதை எவரும் நம்ப மாட்டார்கள்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு உண்மையாகவே இருந்தால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கணிசமான அளவில் நிதியை ஒதுக்கி தேவையான அளவுக்கு புதிய பேருந்துகளை வாங்குவதுடன், புதிய பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். பயணிகள் சேவையையும், நிர்வாகத்தையும் மேம்படுத்துவதன் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதை விடுத்து திருவிழாக் காலங்களில் சிறப்புப் பேருந்துகளாக இயக்க தனியார் பேருந்துகளை ஒப்பந்தம் செய்யும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் விரோத செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நெல்லையில் கந்துவட்டி கொடுமை; மூதாட்டி அடித்துக் கொலை: மருத்துவர் ராமதாஸ் கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com