இரவு நேர சடங்கு.. 2027 ஆஸ்கர் போட்டியில் கோந்தல்.. இப்படத்தின் சிறப்பு என்ன?

Gondhal: ஆஸ்கர் 2027 போட்டிக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாக கோந்தல் (Gondhal) திரைப்படம் தேர்வாகியுள்ளது. இது, மராத்தி சினிமாவுக்கு சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுகிறது.

Published on: September 19, 2026 at 1:28 pm

மும்பை, செப்.19, 2026: 99ஆவது அகாடமி விருதுகளுக்கான சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வப் படமாக மராத்தி திரைப்படமான கோந்தல் (Gondhal) தேர்வு செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ் தாவகார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் 2027 போட்டிக்கு அனுப்புவதாக பிலிப் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (FFI) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவின் கலாசாரப் பின்னணியை மையமாகக் கொண்ட ஒரு பிராந்திய மொழித் திரைப்படம் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

கோந்தல் திரைப்படம், அதே பெயரில் அழைக்கப்படும் மகாராஷ்டிராவின் பாரம்பரிய நள்ளிரவு சடங்கை பின்னணியாகக் கொண்ட திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. கிராமப்புற மகாராஷ்டிராவில் ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு 117 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சடங்கின் பின்னணியில் உருவாகும் பதற்றமான சூழலும், அதனுடன் பின்னிப் பிணைந்த கதையும் படத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.

சந்தோஷ் தாவகார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இஷிதா தேஷ்முக், கிஷோர் கடம், யோகேஷ் சோஹோனி மற்றும் நிஷாத் போயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கெனவே சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இப்படம் கவனம் பெற்றுள்ளது. 56வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (IFFI) சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் (Silver Peacock) விருதை சந்தோஷ் தாவகார் வென்றுள்ளார். இதுவும், கோந்தால் திரைப்படத்தின் சர்வதேச அங்கீகாரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளது.

இந்தியாவின் ஆஸ்கர் அதிகாரப்பூர்வப் படத்தைத் தேர்வு செய்யும் குழுவுக்கு பி. சேஷாத்ரி தலைமை வகித்தார். மொத்தம் 33 திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அவற்றில் இருந்து கோந்தல் திரைப்படம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் 2027 பதிவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவின் சார்பில் போட்டியிடும் இந்தப் படம், அடுத்தகட்ட ஆஸ்கர் தேர்வு நடைமுறைகளை எதிர்கொள்ள உள்ளது.

கோந்தல் திரைப்படம் ஆஸ்கர் போட்டிக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வப் படமாகத் தேர்வாகும் நான்காவது மராத்தி திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2005ஆம் ஆண்டு ஷ்வாஸ் (Shwaas), 2009ஆம் ஆண்டு ஹரிஸ்சந்ராஷி ஃபேக்டரி (Harishchandrachi Factory), 2015ஆம் ஆண்டு கோர்ட் (Court) ஆகிய மராத்தி திரைப்படங்கள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் பதிவுகளாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தன.

தற்போது, அந்த வரிசையில் கோந்தல் திரைப்படம் இணைந்துள்ள நிலையில், பிராந்திய மொழித் திரைப்படங்களின் கதைகளுக்கு சர்வதேச அளவில் கிடைக்கும் கவனத்தை இது மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
கோந்தல் என்பது பண்பாட்டு ரீதியாக மகாராஷ்டிராவில் இரவு முழுவதும் நடைபெறும் ஒரு பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மற்றும் பக்திப் பிரார்த்தனை நிகழ்ச்சியைக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ‘அனைத்து மொழிகளையும் என்னுடையதாகவே கருதுகிறேன்’.. நடிகை ராஷ்மிகா மந்தனா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com