Uttarakhand Tunnel Tragedy : உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் திடீரென தண்ணீர் மற்றும் இடிபாடுகள் புகுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
Uttarakhand Tunnel Tragedy : உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் திடீரென தண்ணீர் மற்றும் இடிபாடுகள் புகுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

Published on: August 14, 2026 at 12:00 pm
டேராடூன், ஆக. 14, 2026: உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் பிபல்கோட்டி பகுதியில், தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (THDC) சார்பில் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்டத்தின் சுரங்கத்துக்குள் நேற்று மாலை திடீரென தண்ணீரும், மண் மற்றும் கற்கள் உள்ளிட்ட கழிவுகளும் பெருக்கெடுத்து புகுந்தன. மாலை சுமார் 6.30 மணியளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கினர். அதிகாரிகளின் சமீபத்திய தகவலின்படி, இந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 2 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளனர்.
சுரங்கத்துக்குள் புகுந்த வெள்ளம்
சுரங்கத்துக்குள் திடீரென அதிக அளவில் தண்ணீர் மற்றும் இடிபாடுகள் புகுந்ததால், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் வெளியேறும் பகுதியை நோக்கி தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த திட்டப் பணியிடத்தில் மொத்தம் 22 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்பு பணி தீவிரம்
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை மற்றும் போலீசார் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுரங்கத்துக்குள் தண்ணீர் மற்றும் இடிபாடுகள் தேங்கியுள்ளதால், சிக்கியுள்ள இரு தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு நடவடிக்கைகளை நேரில் கண்காணித்து வருகிறார்.
கனமழையால் தொடரும் அபாயம்
சமோலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையால் நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. உத்தரகாண்டில் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மீட்பு நடவடிக்கைகளிலும் கூடுதல் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ராகுல் காந்தி சொத்து குவிப்பு வழக்கு.. அமலாக்கத்துறை விசாரணை?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com