புதுடெல்லி, ஆக. 8 2026 ; வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (FCRA Amendment Bill) தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய ஆட்சேபனைகளை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “சட்டங்களை இயற்றுவது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; இதில் முடிவெடுக்கும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளும் வெளிநாட்டு நிதியின் வரவைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்..
இந்திய கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். வளைகுடா பிராந்தியத்தில் உள்ள இந்தியத் தூதரகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் கடல்சார் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். தேவைப்படும் நபர்கள் உதவி பெறும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச கடல்வழிகளில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்து, வர்த்தகத்தின் சுதந்திரமான இயக்கம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடு என ஜெய்ஸ்வால் கூறினார். பொதுமக்களின் உள்கட்டமைப்புகள், பொதுமக்கள் பயணிக்கும் கப்பல்கள் மற்றும் மாலுமிகளை குறிவைத்து எந்தத் தரப்பும் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான்–துருக்கி–சவுதி அரேபியா இடையிலான சமீபத்திய பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல், பாகிஸ்தான்–சோமாலியா இடையிலான சமீபத்திய பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னேற்றங்களையும் இந்தியா தொடர்ந்து கவனித்து வருவதாக ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மழை வெள்ளத்தில் மிதந்த டெல்லி.. ரெட் அலர்ட் விடுப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்