சென்னை, ஜூன் 27 2025: அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வியாழக்கிழமை (ஜூன் 26 2025) விடுத்துள்ள அறிக்கையில், “திருப்பூர் அருகே அரசுப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல் – பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாகவும், சட்டவிரோதிகளின் கூடாரமாகவும் மாற்றிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம் உடுமைலையை அடுத்துள்ள காரத்தொழுவில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியரின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடைபெற்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இரவு- பகலாக மதுபான விற்பனை
தமிழகத்தில் இரவு, பகலாக சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனையையும், பெருக்கெடுத்து ஓடும் கள்ளச்சாராய விற்பனையையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசால், அரசுப்பள்ளிகள் மதுபானக்கூடங்களாக மாறிவருவதோடு, அதனை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதன் உச்சபட்சத்தை அடையும் என்பதற்கு நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களே சாட்சியாக இருக்கும் நிலையில், தற்போது அரசுப்பள்ளிகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அளவிற்கு மெத்தனப்போக்குடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, பெட்ரோல் ஊற்றி தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியருக்கு உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வதோடு, பள்ளி வளாகத்தில் மது அருந்தி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம்; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்