சென்னை, ஆக.18 2025: மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், “தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையைக் கைவிட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், “தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதைக் கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் இறுதியில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தின் போது பேச்சுவார்த்தை எனும் பெயரில் அழைத்து பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம், தற்போதுவரை அவற்றை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஆட்சிப்பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மின்வாரிய மற்றும் போக்குவரத்து ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருமே போராடிக் கொண்டிருப்பது திமுக அரசு நிர்வாகத்தின் படுதோல்வியையே வெளிப்படுத்துகிறது” எனவும் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து, “சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தின் மீது வன்முறையை ஏவிக் கலைத்துவிட்டு, உடனடி நடைமுறைக்குச் சாத்தியமில்லாத அறிவிப்புகளை வெளியிட்டு திமுக அரசு நடத்திய நாடகத்தை மதுரையிலும் அரங்கேற்ற நினைத்தால் அதற்கான எதிர்வினைகள் கடுமையாக இருக்கும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என மதுரை மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : விரக்தியின் உச்சம்.. அன்புமணிக்கு அமைச்சர் பதிலடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்