மு.க. ஸ்டாலினுக்கு செளமியா அன்புமணி கடிதம் : திருநங்கைகள் விவகாரம் தொடர்பாக செளமியா அன்புமணி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டில் திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோருக்கான சமூகநீதி உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்வதற்கான கொள்கைகளை வகுக்கும் போது அவற்றை ஒருங்கிணைந்து வகுக்காமல் தனித்தனியாக வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கடிதத்தில் மேலும் செளமியா, தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் ஒதுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், அவமதிக்கப்பட்டும் வரும் திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவரின் சிக்கல்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்குடனும், அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரவும் முதலமைச்சராகிய தங்களுக்கு, அவர்களின் பிரச்சினைகளை அறிந்தவர் என்ற முறையில் இக்கடிதத்தை நான் எழுதுகிறேன்.
மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு கடவுளின் குழந்தைகள் என்று கொண்டாடப்படுகிறார்களோ, அதே போல் தான், பிறப்பிலேயே இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவரும் அரசாலும், சமூகத்தாலும் அரவணைக்கப்பட்டிருக்க வேண்டும்; கொண்டாடப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடக்காதது மட்டுமின்றி, அவர்கள் தீண்டத்தகாதவர்களையும் விட மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்; பொதுவெளியில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவரின் உரிமைகளைக் காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவர்கள், தங்களுக்கு இட ஒதுக்கீட்டுடன் கூடிய தனிக்கொள்கையை உருவாக்க வேண்டும் என்று கோரி கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த வழக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10&ஆம் நாள் விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் அவர்கள், திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கு தனிக் கொள்கை வகுக்கலாம் என்று தமிழக அரசுக்கு ஆணையிட்டார். அதனடிப்படையில் தமிழக அரசும் தனிக் கொள்கையை வகுத்து வருகிறது.
அந்தக் கொள்கை அரசிதழில் வெளியிடப்படுவதற்கு மொத்தம் 9 நிலைகளைக் கடக்க வேண்டிய சூழலில், இப்போது எட்டாவது கட்டத்தில் இருப்பதாகவும், இதைக் கடந்து அமைச்சரவையின் ஒப்புதலை பெற வேண்டும் என்றும் கடந்த 3&ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசின் வழக்கறிஞர், கொள்கையை உறுதி செய்ய 3 மாதம் கூடுதல் கெடு வழங்கக் கோரினார்.
இந்த விவகாரத்தில் இதுவரை எந்தச் சிக்கலும் இல்லை. திருநங்கையர்களைக் போலவே தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் தனிக்கொள்கை வகுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தங்களுக்கு தனிக் கொள்கை தேவையில்லை என்றும், இரு தரப்பினருக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் அவர்கள், கடந்த 3&ஆம் தேதி இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கும், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் தனித்தனியாக கொள்கைகள் வகுப்பதால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும்; அதனால் இருவருக்கும் ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்த அரசின் நிலைப்பாட்டை வரும் 17&ஆம் தேதி விளக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.
திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கும், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் ஒருங்கிணைந்த கொள்கை வகுக்கப்பட்டால், திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவரின் சமூக அங்கீகாரத்திற்கும், வளர்ச்சிக்கும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேறுவதற்கும் அவர்களுக்கென்று தனிக் கொள்கை தேவை. இதை உணர்ந்து திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கு தனிக் கொள்கை வகுக்கும் முடிவில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை வரும் 17&ஆம் தேதி இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் போது உறுதிபட தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : 7,360 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? தி.மு.க. அரசுக்கு அண்ணாமலை கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்