சென்னை, மார்ச் 9, 2026: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயை, செவ்வாய்க்கிழமை (மார்ச் 10, 2026) புதிய விசாரணைக்காக மத்திய புலனாய்வு குழு (சி.பி.ஐ) அழைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஜயிடம் ஏற்கனவே ஜனவரி 12 மற்றும் 19ஆம் தேதிகளில், புதுடெல்லியில் உள்ள சி.பி.ஐ தலைமையகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது, மேலும் கேள்விகள் கேட்கவும், விளக்கங்கள் பெறவும் தேவையான தகவல்களை சி.பி.ஐ சேகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதற்காக புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
2025 செப்டம்பர் 27 அன்று தமிழ்நாட்டின் கரூரில் விஜயின் பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், சிறப்பு விசாரணை குழுவில் இருந்து சி.பி.ஐ எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கில், கடந்த அக்டோபரில் உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ இயக்குநர் மூத்த அதிகாரியை நியமித்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும், முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மேற்பார்வைக் குழுவை அமைத்தது.
நீதிபதிகள் ஜே. கே. மகேஷ்வரி மற்றும் என். வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வு, “இந்த நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குடிமக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதில் மிக முக்கியமானது,” என்று தெரிவித்தது.
மேலும், “விசாரணை முறையில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான வழி, இந்த வழக்கின் விசாரணை முற்றிலும் சார்பற்ற, சுயாதீனமான மற்றும் பாகுபாடற்றதாக இருக்க வேண்டும் என்பதே” என நீதிமன்றம் குறிப்பிட்டது என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: டி20 உலக கோப்பை 2026.. மூன்று சாதனை படைத்த இந்தியா.. பட்டியலிட்ட அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்