Anbumani question DMK Gov | பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani question DMK Gov | பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Published on: November 30, 2024 at 3:05 pm
Anbumani question DMK Gov | அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடத்தை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபுறம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி விட்டு, இன்னொரு புறம் அதை எதிர்ப்பது போல, திராவிட மாடல் அரசு நடத்தும் பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்.
அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில், அது குறித்த சில விவரங்களை மத்திய சுரங்கத்துறை வெளியிட்டுள்ளது.
அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தில் விடப்படுவதற்கு முன்பாக தமிழக அரசிடமிருந்து சில உள்ளீடுகள் பெறப்பட்டன. டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலத்தில் விடுவதற்கு வசதியாக அப்பகுதியில் உள்ள 47.37 ஹெக்டேர் பரப்பளவிலான கிரானைட் சுரங்கத்திற்கான குத்தகையை தமிழக அரசின் டாமின் நிறுவனம் திரும்ப ஒப்படைத்து விட்டது. ஏல நடவடிக்கை தொடங்கிய கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட 07.11.2024 ஆம் தேதி வரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை” என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.
டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தில் விடப்படுவது குறித்த விவரங்களை தமிழக அரசுக்கு மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. அப்போதெல்லாம் எந்த எதிர்ப்பையும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. இன்னும் கேட்டால் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு கடந்த ஆண்டே மத்திய அரசின் அனுமதியை தமிழக அரசு கோரியிருக்கிறது. இப்படியாக அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனைத்து வழிகளிலும் துணை போன திராவிட மாடல் அரசு இப்போது மக்களிடம் கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைப் போல நாடகமாடுகிறது.
திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலனை விட தங்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கும். காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு ஆய்வுக்கு அனுமதி அளித்தது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது என திராவிட மாடல் அரசு மக்களுக்கு செய்த துரோகங்களுக்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்திலும் இப்போது அதே துரோகத்தை திமுக அரசு செய்கிறது. அரிட்டாப்பட்டி மக்களின் உணர்வுகளை மதித்து அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்”. என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்ற நகராட்சி ஆணையருக்கு நெல்லை மாநகராட்சி பதவியா? ; அன்புமணி கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com