இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on: December 8, 2024 at 1:12 pm
Updated on: December 8, 2024 at 6:47 pm
Anbumani questioned DMK Govt | அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் மீன் பிடிக்கும் போது அவர்களை சிங்களக் கடற்படை அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது; அதை எந்த வகையிலும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2-ஆம் தேதி 18 மீனவர்களும், 4-ஆம் தேதி 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று கூட கடுமையான போராட்டம் நடத்தியிருக்கும் நிலையில், மேலும் 8 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது என்றால், அது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.
2024-ஆம் ஆண்டில் மட்டும் தமிழக மீனவர்கள் 569 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 73 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற இலங்கை அரசு மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் 96 மீனவர்களுக்கு 6 மாதங்கள் முதல் இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டும், அபராதம் விதிக்கப்பட்டும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நான் எழுப்பிய வினாவுக்கு அளித்த பதிலிலும் மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. ஆனாலும், அவர்களை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இலங்கைக் கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உள்ளிட்ட அங்குள்ள சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும் உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கும் மேலாக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க ராமேஸ்வரம் ; தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com