தேசிய கல்விக் கொள்கை.. அரசியல் பார்வை கூடாது.. மு.க ஸ்டாலினுக்கு பிரதான் கடிதம்!
Dharmendra Pradhan letter MK Stalin: தேசிய கல்விக் கொள்கை (2020)-க்கு மு.க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ” தேசியக் கல்விக் கொள்கை 2020 அரசியல் ரீதியாக பார்க்க கூடாது; மாணவர்களின் நலனுக்காக இந்தக் கொள்கை மிகவும் நெகிழ்வானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது” எனது தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதி உள்ள கடிதத்தில், “தேசிய கல்விக் கொள்கை 2020 வெறும் சீர்திருத்தம் மட்டுமல்ல; இது நமது மொழி மற்றும் பன்முக கலாச்சாரங்களை பாதுகாத்து வலுப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்த கல்விக் கொள்கை நமது இந்திய கல்வி முறையை உலகளாவிய தரத்திற்கு உயர்த்த முயலும். மேலும் இது மாற்றத்தை ஏற்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக இதில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது குறித்தும் தனது கடிதத்தில் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். அதில், ” எந்த ஒரு மாநிலத்தின் மீதும் சமூகத்தின் மீதும் எந்த ஒரு மொழியையும் திணிக்கும் கேள்விக்கே இடம் இல்லை” எனது தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அந்த கடிதத்தில் காசி தமிழ்ச் சங்கமும் மற்றும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமும் போன்ற முயற்சிகளை மேற்கோள் காட்டியுள்ள தர்மேந்திர பிரதான், ” தமிழ் மொழி நித்தியமானது தமிழ் கலாச்சாரம் உலகளாவியது என பிரதமர் நரேந்திர மோடி 2022 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தபோது கூறியதை சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும் அரசியல் காரணங்களுக்காக புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; அவர்களுக்கான மகத்தான வாய்ப்புகள் மற்றும் வளங்களை இழக்க செய்யும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. ஆளும் திமுக அரசு இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு பாஜக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ” திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி பயிற்றுவிக்கப்படுகிறது” என்றார். மேலும் தொல் திருமாவளவனின் CBSE பள்ளிக்கூடம் குறித்தும் அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டை தொல் திருமாவளவன் மறுத்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.