இடஒதுக்கீடு உரிமையை பாதிக்கும் மதமாற்றம்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?

Reservation for Converts Case: மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என தமிழக அரசின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Published on: October 17, 2026 at 8:11 pm

புதுடெல்லி, அக்.17, 2026: இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள், தங்களின் முந்தைய சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கான (BC Muslim) இடஒதுக்கீட்டைப் பெற முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் அடங்கிய அமர்வு அக்டோபர் 15ஆம் தேதி நிராகரித்தது.

இந்த வழக்கின் பின்னணியில், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினரின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ‘முஸ்லிம் லெப்பை’ சமூகச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். இதற்கிடையே, குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் பட்டியலினத்தவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினால், ஏழு அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்களாகச் சான்றிதழ் பெற வழிவகுக்கும் வகையில் 2024ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை கடந்த ஜூன் 25ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மதம் மாறியிருப்பது மட்டுமே, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரமாகாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அரசாணை ஏற்கெனவே இருந்த இடஒதுக்கீட்டுப் பயனைத் தொடர்வதற்காகவே கொண்டுவரப்பட்டது என்று தமிழக அரசு வாதிட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ஒருவர் மதம் மாறுவதால் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராகிவிட முடியாது என்று தெரிவித்தது. மேலும், முந்தைய மதத்தில் இருந்த சமூகப் பின்தங்கிய நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு புதிய மதத்தில் இடஒதுக்கீட்டுத் தகுதியைப் பெற முடியாது என்றும் கூறியது. ஒரு நபர் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவரா என்பதைத் தீர்மானிக்கும் சட்டப்பூர்வ அதிகாரத்தை ஜமாத் போன்ற தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

மேலும், அரசியலமைப்பின் கீழ் பட்டியலினத்தவர் (SC) என்ற அங்கீகாரம், பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி இந்து, சீக்கிய மற்றும் புத்த மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அதேநேரத்தில், மதம் மாறிய ஒருவர் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பினால், அவருக்கு இடஒதுக்கீட்டுத் தகுதி தானாகக் கிடைத்துவிடாது; அவரது முந்தைய சமூக அடையாளம் உண்மையாக மீண்டும் நிலைபெற்றுள்ளதா என்பது உள்ளிட்ட அம்சங்களை அதிகாரிகள் தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இளம்பெண் பாலியல் வன்கொடுமை, மதமாற்றம்.. லவ் ஜிகாத் புகாரில் சிக்கிய பிரபலம்!

ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது.. டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் கருத்து!
Tamil Growth Among Gen Z

ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது.. டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் கருத்து!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com