புதுடெல்லி, பிப்.27:ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி. சஞ்சீவ் அரோரா, பஞ்சாப் மாநில இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதால் அவருக்கு பதிலாக அரவிந்த் கெஜ்ரிவால் ராஜ்யசபா எம்.பி. ஆகலாம் என கூறப்படுகிறது.
செல்வாக்கு சரிந்தது
ஊழலை எதிர்த்து டெல்லியில் ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அதே ஊழல் பிரச்சினையில் சிக்கி ஜெயிலுக்கும் போய் வந்தார். இதில் இருந்து அவருடைய செல்வாக்கு சரிந்தது. ஆனாலும் தேர்தலில் மக்கள் தன்னை குற்றமற்றவர் என நிரூபிப்பார்கள் என கூறினார். அதுவும் பொய்த்துவிட்டது. புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட இவரை பா.ஜனதா வேட்பாளர் பர்வேஷ் வர்மா தோற்கடித்து விட்டார்.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில் பா.ஜனதா 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
பஞ்சாபில் இடைத்தேர்தல்
தேர்தலில் கண்ட தோல்வியால் அரவிந்த் கெஜ்ரிவால் கையறு நிலையில் இருக்கிறார். இதே சூழ்நிலையில் அவர் வழக்கின் நடவடிக்கைகளை தொடர்ந்து சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் அவர் அதிகாரம் உள்ள ஏதாவது ஒரு பிரதிநிதித்துவத்தை பெறுவார் என பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மேற்கு சட்டசபை தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குர்பிரீத் பாசி கோகி காலமானார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
ராஜ்யசபா எம்.பி.
இதனை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி அங்கு தனது வேட்பாளரை அறிவித்து இருக்கிறது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் சஞ்சீவ் அரோரா.
இவர் கடந்த 2022-ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி. ஆனார். 2028-ம் ஆண்டுவரை அவருக்கு பதவிக்காலம் இருக்கிறது. இந்த நிலையில் அவர் சட்டசபை இடைத்தேர்தலுக்கு வேட்பாளர் ஆகியிருக்கிறார்.
எனவே இவருக்கு பதிலாக ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜ்யசபா எம்.பி. ஆவார் என கூறப்படுகிறது. கெஜ்ரிவாலை எம்.பி. ஆக்கவே இந்த காய் நகர்த்தல்கள் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
பா.ஜனதா விமர்சனம்
இதனை பா.ஜனதா கடுமையாக விமர்சித்து உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஆசை பிடித்தவர் என்றும், அவருக்கு பதிலாக வேறு யாரையாவது நிறுத்தினால் நன்றாக இருக்கும் என பா.ஜனதாவினர் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே இந்த தகவல்களை ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் மறுத்துள்ளார். “இப்படித்தான் முன்பு, அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்-மந்திரி ஆவார் என்று சொன்னார்கள். அதில் உண்மையில்லை. அதுபோலத்தான் இதுவும். இரண்டுமே தவறானவை” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க இதுதான் வாழ்க்கையா? இது பிரச்னை.. டூர் சென்ற இஸ்லாமிய விதவை பெண்ணுக்கு மதகுரு எதிர்ப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்