மெல்போர்ன், ஆக. 15, 2026: பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு ஆஸ்திரேலியாவின் லா ட்ரோப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் பட்டம் வழங்கியுள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு, மனிதநேயப் பணிகள் மற்றும் சமூக அக்கறைக்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பெடரேஷன் ஸ்கொயரில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டது.
லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின் இந்த உயரிய கவுரவத்தைப் பெறும் இரண்டாவது இந்திய திரையுலக பிரபலம் என்ற பெருமையை ராணி முகர்ஜி பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு நடிகர் ஷாருக்கானுக்கு சினிமா மற்றும் தொண்டு பணிகளில் அவர் செய்த பங்களிப்புக்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ராணி முகர்ஜியின் சுமார் 3 தசாப்த கால திரைப்பயணம் மற்றும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய கதாபாத்திரங்களையும் பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது.
கவுரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றபோது ராணி முகர்ஜி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். இந்த அங்கீகாரம் தனது வாழ்க்கையின் மிகவும் பணிவான தருணங்களில் ஒன்று என்று அவர் தெரிவித்துள்ளார். சிறு வயதில் தனது குடும்பத்தையும் நாட்டையும் பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும், அதற்கான ஊடகமாக சினிமா அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், பெண்களை ஊக்கப்படுத்தும் கதைகளைத் தேர்வு செய்து நடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘குச் குச் ஹோதா ஹை’, ‘சாதியா’, ‘ஹம் தும்’, ‘பிளாக்’, ‘மர்தானி’ திரைப்படத் தொடர், ‘மிஸஸ் சட்டர்ஜி வெர்சஸ் நார்வே’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் ராணி முகர்ஜி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 2026 இந்திய திரைப்பட விழா மெல்போர்னிலும் சிறந்த நடிப்புக்கான சிறப்பு பாராட்டு சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினருக்கான மனிதநேயப் பணிகளும் இந்த அங்கீகாரத்தில் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளன.
இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனா ரொமாண்டிக் படம்.. காக்டெயில் 2 ஓ.டி.டி ரிலீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்