India-France Ties: பாரிஸில் திறக்கப்பட்ட சுவாமிநாராயண் இந்து கோவில், இந்தியா–பிரான்ஸ் இடையேயான ஆழமான கலாசார மற்றும் ஆன்மிக உறவுக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
India-France Ties: பாரிஸில் திறக்கப்பட்ட சுவாமிநாராயண் இந்து கோவில், இந்தியா–பிரான்ஸ் இடையேயான ஆழமான கலாசார மற்றும் ஆன்மிக உறவுக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Published on: September 7, 2026 at 12:53 pm
Updated on: September 7, 2026 at 1:02 pm
பாரிஸ், செப். 7 2026: இந்தியா–பிரான்ஸ் இடையேயான உறவு கடந்த பல ஆண்டுகளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து இரு நாடுகளும் சிறப்பு உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை உருவாக்கி வருவதாக அவர் கூறினார். பாரிஸில் சுவாமிநாராயண் இந்து கோவில் திறப்பு விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் காலநிலை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவும் பிரான்ஸும் புதிய வேகத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டை இரு நாடுகளும் இந்தியா–பிரான்ஸ் புதுமை ஆண்டாக கொண்டாடி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியா–பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மை நீண்டகால கலாசார மற்றும் அரசியல் தொடர்புகளின் வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். பிரான்ஸில் இந்திய வீரர்கள் செய்த தியாகங்கள் இரு நாடுகளின் வரலாற்றிலும் மக்கள் நினைவிலும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். சமஸ்கிருதத்தைப் பரப்புவதிலும் பிரபலப்படுத்துவதிலும் பிரெஞ்சு அறிஞர்கள் முக்கிய பங்காற்றியதாகவும், ரோமன் ரோலண்ட் எழுதிய ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் குறித்த படைப்புகள் இரு சமூகங்களையும் மேலும் நெருக்கமாக்கியதாகவும் கூறினார்.
பாரிஸ் முதல் புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் வரையிலான ஆன்மிகப் பயணத்தில் ‘தி மதர்’ பல இந்திய மற்றும் பிரெஞ்சு ஆன்மிகத் தேடலாளர்களுக்கு உத்வேகம் அளித்ததாகவும், ஸ்ரீல பிரபுபாதர் சுவாமி பிரான்ஸுக்கு வந்து இஸ்கான் மூலம் இந்தியா–பிரான்ஸ் ஆன்மிக உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா–பிரான்ஸ் மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்துவதில் யோகாவும் முக்கிய ஊடகமாக விளங்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சர்வதேச யோகா தினத்தையொட்டி பாரிஸில் ஈஃபிள் கோபுரம் முன்பு நடைபெற்ற யோகா நிகழ்வுகளின் காட்சிகள், பிரான்ஸில் யோகாவுக்கு கிடைத்துள்ள வரவேற்பை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.
தற்போது பிரமாண்டமான பிஏபிஎஸ் சுவாமிநாராயண் கோவில் மூலம் இந்தியா–பிரான்ஸ் ஆழமான கலாசார உறவில் புதிய அத்தியாயம் இணைந்துள்ளதாக தெரிவித்தார். இந்தியா–பிரான்ஸ் கூட்டு முயற்சிகளுக்கான வாய்ப்புகள் குறித்து அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த கோவிலும் அதற்கு புதிய பரிமாணத்தை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கோவில் “இந்தியாவில் உருவாக்கப்பட்டு, பிரான்ஸில் கட்டப்பட்டது” என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். கோவிலில் பயன்படுத்தப்பட்ட கற்களில் கணிசமான பகுதி இந்தியாவில் செதுக்கப்பட்டதாகவும், இந்தியாவின் பாரம்பரிய கைவினைத்திறனும் திறமையும் பிரான்ஸின் நவீன பொறியியல் தொழில்நுட்பத்துடன் இணைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பல நூற்றாண்டுகளுக்கு இந்தியா–பிரான்ஸ் ஒத்துழைப்பின் அடையாளமாக இந்த கோவில் திகழும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர், சுவாமிநாராயண் கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் சேவை மையங்களாகவும் விளங்கி வருவதாக குறிப்பிட்டார். இந்த கோவிலில் இருந்து வெளிப்படும் கலாசார மற்றும் ஆன்மிகச் செய்திகள் ஐரோப்பா முழுவதும் மக்களுக்கு பயனளிக்கும் என்றும், பிரான்ஸின் பன்முக கலாசாரத்தை மேலும் வளப்படுத்துவதுடன் இந்தியா–பிரான்ஸ் கலாசார உறவுக்கு புதிய உத்வேகத்தையும் வழங்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க; “இந்தியா வலுவான, துடிப்பான பொருளாதாரம்” – அமெரிக்கா பாராட்டு! 7.8% ஜிடிபி வளர்ச்சிக்கு வரவேற்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com