₹135 Crore Special Package : தமிழக முதலமைச்சர் விஜய், குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். மேட்டூர் அணை திறப்பதற்கான வாய்ப்பு இன்றைய நிலையில் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
₹135 Crore Special Package : தமிழக முதலமைச்சர் விஜய், குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். மேட்டூர் அணை திறப்பதற்கான வாய்ப்பு இன்றைய நிலையில் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Published on: June 12, 2026 at 1:17 pm
Updated on: June 12, 2026 at 1:20 pm
சென்னை, ஜுன் 12 2026: குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் 2026-ஆம் ஆண்டுக்கான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் நெல் சாகுபடி முக்கிய பங்கு வகிப்பதாகவும், நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 52.72 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் ஆண்டுக்கு 20.65 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. குறுவை பருவத்தில் மட்டும் சுமார் 5.14 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கமாக இருந்தாலும், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதம் மற்றும் ‘எல்நினோ’ தாக்கம் காரணமாக மழைப்பொழிவு 90 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து, அணையின் நீர்மட்டம் தற்போது 79.56 அடியாகவும், 41.52 டி.எம்.சி. நீர் இருப்பாகவும் உள்ளதால், ஜூன் 12-ஆம் தேதி அணையை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் ⁰டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் ⁰குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026"
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 12, 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப்விஜய் அவர்களின் அறிவிப்பு#CMJosephVijay pic.twitter.com/EU0YgxAJg4
இதனால் டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், வடிமுனைக் குழாய்க் கிணறுகள் மூலம் 3.55 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி செய்ய முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்கள் மூலம் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.57.33 கோடியும் ஒதுக்கப்பட்டு மொத்தம் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் இயந்திர நெல் நடவு மற்றும் நேரடி விதைப்புக்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் மானியம் மற்றும் புதிய நெல் ரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் இயந்திரமயமாக்கல், நீர் மேலாண்மை மற்றும் தரமான விதைகள் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு, நெல் உற்பத்தியும் விவசாயிகளின் வருமானமும் உயர்த்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும், வேளாண் பொறியியல் துறை மூலம் டெல்டா மாவட்டங்களில் 2,325 கிலோமீட்டர் நீளமுள்ள சி மற்றும் டி வாய்க்கால்கள் ரூ.10 கோடி செலவில் தூர்வாரப்பட்டுள்ளன. நீர்வளத்துறை சார்பில் ரூ.100 கோடி செலவில் 4,971 கிலோமீட்டர் நீளமுள்ள ஏ மற்றும் பி வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளில் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்காக 10,714 மெட்ரிக் டன் விதை நெல் மற்றும் 4.02 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளுக்காக நாளொன்றுக்கு 18 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க அனுபவம் இல்லாத அமைச்சர்கள், புதிய எம்.எல்.ஏ.க்கள்.. தவெக அரசுக்கு நேரம் கொடுங்கள்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com