தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை! 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
Monsoon Alert: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, அக்டோபர் 19 வரை பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, அக். 16, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியதைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அக்டோபர் 19-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். இருப்பினும், வட மாவட்டங்களில் இயல்பைவிடக் குறைவாகவும், தென் மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பையொட்டியும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் கடலோரப் பகுதிகளில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (அக்டோபர் 16) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். நாளை (அக்டோபர் 17) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரூர் மாவட்டம் தோகைமலை, மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தின் தரங்கம்பாடி, மருதம்பள்ளம், திருச்சி மாவட்டம் ஏழுப்பட்டி ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கவனித்து, கனமழை நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.