Dr Ramadoss: “தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டத்தை இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் பா.ம.க நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ்.
Dr Ramadoss: “தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டத்தை இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் பா.ம.க நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ்.
Published on: October 17, 2025 at 2:38 pm
சென்னை, அக்.17, 2025: பா.ம.க நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெள்ளிக்கிழமை (அக்.17, 2025) விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ‘5 ஆண்டுகளில் ஓய்வு பெறக்கூடிய ஆசிரியர்களை தவிர, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் முடியும்” என்றது.
இதன் மூலம் 2011 தகுதித் தேர்வுக்கு முன்பாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணியில் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றாக வேண்டும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் எதிர்த்த நிலையில், பல்வேறு மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுக்கள் அளித்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “இதேபோல், தமிழக அரசும், ‘தகுதித் தேர்வு விவகாரத்தை பொருத்தவரை அது மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டது. பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் இந்த தீர்ப்பினால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சீராய்வு மனு இம்மாதம் பிற்பகுதியில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் 2026-ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை, டிசம்பர் மாதங்கள் என 3 முறை சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. தகுதித் தேர்வு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மறு பறுசீலனை செய்வதற்காக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தகுதித் தேர்வு நடத்துவதற்காக அரசாணை வெளியிட்டுள்ளது முரண்பாடாக உள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான ஆசிரியர்களிடையே குழப்பமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘உச்சநீதிமன்ற தீர்ப்பில் இருந்து மூத்த ஆசிரியர்களை பாதுகாக்க விரைவில் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்’ என்று அறிவித்துள்ளார்.
இது நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிம்மதியை தந்த நிலையில் தமிழக அரசின் இந்த அரசாணை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “மத்திய கல்வி அமைச்சகத்திடம் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டையும், 2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தையும் விளக்கிக் கூறி, மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் வாதாட செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, ஒரு பக்கம் சீராய்வு மனு தாக்கல் செய்துவிட்டு, இன்னொரு பக்கம் தகுதித் தேர்வு நடத்த முற்படுவதை கைவிட வேண்டும். அதேபோல், தகுதித் தேர்வு வருவதற்கு முன்பாக, 2011 நவம்பர் 15-க்கு முன், பணியில் சேர்ந்த மூத்த தகுதிக்கான் பருவம் முடித்த ஆசிரியர்களை தகுதித் தேர்வில் இருந்து விடுவித்து பாதுகாக்கும் சிறப்பு சட்டத்தை தற்போது நடக்கும் சட்டசபை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்“ எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க :திமுகவுக்கு தாளம் போடுபவர்களுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com