Actor Ajay Ratnam wins gold Medal: பிரபல நடிகரான அஜய் ரத்னம் தேசிய அளவில் நடத்தப்பட்ட பென்ச் பிரஸ் பவர் லிஃப்டிங் மாஸ்டர் பிரிவு போட்டியில் கலந்துகொண்டு தங்கபதக்கம் வென்றார்.
Actor Ajay Ratnam wins gold Medal: பிரபல நடிகரான அஜய் ரத்னம் தேசிய அளவில் நடத்தப்பட்ட பென்ச் பிரஸ் பவர் லிஃப்டிங் மாஸ்டர் பிரிவு போட்டியில் கலந்துகொண்டு தங்கபதக்கம் வென்றார்.

Published on: January 18, 2026 at 5:17 pm
Updated on: January 18, 2026 at 7:40 pm
ஹரியானா, ஜனவரி 18 2026; தமிழ்த் திரையுலகில் ஒரு சில நடிகர், நடிகையர்கள் நடிப்பைத் தாண்டி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டவர்களாகவும் அத்துறைகளில் தங்களது தனித்திறமையால் மிளிர்பவர்களாகவும் விளங்கி வருகின்றனர். அவ்வகையில் திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகராக உள்ள நடிகர் அஜய் ரத்னம், அண்மையில், தேசிய அளவில் நடத்தப்பட்ட பென்ச் பிரஸ் பவர் லிஃப்டிங் மாஸ்டர் பிரிவு போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கபதக்கம் வென்றார்.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் கடந்த 09/01/2026 அன்று சர்வதேச, ஆசிய, காமன்வெல்த் ஆகிய கூட்டமைப்புகளுடன் இணைப்பு பெற்ற பவர் லிஃப்ட் இந்தியா நிறுவனத்தால் தேசிய அளவில் பென்ச் பிரஸ் பவர் லிஃப்டிங் மாஸ்டர் பிரிவு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜய் ரத்னம், போட்டியில் முதலிடம் பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு, பவர் லிஃப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சதிஷ் குமார், சாம்பியன்ஷிப் செயலாளர் அஜித் நாயர் ஆகியோரின் முன்னிலையில் பொதுச்செயலாளர் பிஃஜே. ஜோசப், வெற்றியாளரான அஜய் ரத்னத்திற்கு தங்கப்பதக்கம் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, அஜய் ரத்னத்தின் வழிகாட்டியும், தலைமை பயிற்சியாளரும், ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியனும், ஷெனாய்நகரில் உள்ள ஃபிட் ட்ரீ ஃபிட்னஸ் சென்டர், எம்.கே. ஸ்கூல் ஆஃப் பவர் லிஃப்டிங் நிறுவனரும் உரிமையாளருமான மாய கிருஷ்ணன், பயிற்சியாளர் தர்மலிங்கம் மற்றும் தமிழ்நாடு மற்றும் சென்னை பவர் லிஃப்டிங் சங்க உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
நடிகர் அஜய் ரத்னம், ஏற்கெனவே சென்னையில் கடந்த 07/12/2025 அன்று மாநில அளவில் நடைபெற்ற பென்ச் பிரஸ் பவர் லிஃப்டிங் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். அப்போட்டியின் தலைமை விருந்தினராக வருகை புரிந்து போட்டியை சிறப்பித்த, தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு. மா.சுப்பிரமணியன், நடிகர் அஜய் ரத்னத்திற்கு தங்கப்பதக்கம் வழங்கினார். இப்போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் அஜய் ரத்னம், பென்ச் பிரஸ் பவர் லிஃப்டிங் மாஸ்டர் பிரிவு போட்டியில் தேசிய அளவில் கலந்து கொள்வதற்குரிய தகுதிச் சுற்றில் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பென்ச் பிரஸ் பவர் லிஃப்டிங் மாஸ்டர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அஜய் ரத்னம், ‘‘இயல்பாகவே உடலைப் பேணுவதில் எனக்கு மிகுந்த அக்கறையும் ஆர்வமும் உண்டு. எனவேதான், இவ்வாறான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். போட்டிகளில் உரிய பயிற்சியோடு பங்கேற்கிறேன். அந்த முயற்சியும் பயிற்சியும்தான் எனக்கு தங்கப்பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை வழங்கியது. மேலும், சாதிப்பதற்கு வயது ஒரு காரணமும் அல்ல. தடையும் அல்ல. அதேநேரம், இதற்கு காரணமான எனது அன்புக்குரிய ஷெனாய்நகரில் உள்ள ஃபிட் ட்ரீ ஃபிட்னஸ் சென்டர், எம்.கே. ஸ்கூல் ஆஃப் பவர் லிஃப்டிங் நிறுவனரும் உரிமையாளருமான மாய கிருஷ்ணன் மற்றும் பயிற்சியாளர் தர்மலிங்கம் ஆகியோர் எப்போதும் என் நன்றிக்குரியவர்கள்’’ என்றார்.
இதையும் படிங்க: நடிகர் தனுசு உடன் திருமண வதந்தி? ரசிகர்களை கவர்ந்த ம்ருனால் தாக்கூர் வீடியோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com