Anbumani Ramadoss: “நீட் விலக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை… அதை நாங்கள் மறுக்கலையே என்று கூறி மாபெரும் துரோகத்தை மிகவும் எளிதாக கடந்து செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார்.” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Anbumani Ramadoss: “நீட் விலக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை… அதை நாங்கள் மறுக்கலையே என்று கூறி மாபெரும் துரோகத்தை மிகவும் எளிதாக கடந்து செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார்.” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Published on: September 15, 2025 at 11:28 am
சென்னை, செப்.15, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை (செப்.14, 2025) விடுத்திருந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வழங்கிய 505 தேர்தல் வாக்குறுதிகளில், 364 நிறைவேற்றி செயல்பாட்டில் இருக்கிறது. 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் இருக்கிறது.
அந்த வகையில், மொத்தம் 404 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று மீண்டும் ஒரு பொய்யை கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மீண்டும், மீண்டும் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்ற திமுக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தேர்தலில் அளிக்கப்பட்டவற்றில் 98% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பெரும் பொய் கூறி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் வெறும் 66 வாக்குறுதிகள், அதாவது 13% வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பாட்டாளி மக்கள் கட்சி பட்டியலிட்டு ’’விடியல் எங்கே?” என்ற தலைப்பில் ஆவணமாக வெளியிட்ட பிறகு 98 விழுக்காட்டில் இருந்து இறங்கி வந்து 364 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டு வருவதாக சற்று குறைவான பொய்யைக் கூறி வருகிறார்” எனக் கூறியுள்ளார்.
நீட் விலக்கு வாக்குறுதி என்ன ஆனது?
தொடர்ந்து, “நீட் விலக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை… அதை நாங்கள் மறுக்கலையே என்று கூறி மாபெரும் துரோகத்தை மிகவும் எளிதாக கடந்து செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார். அவருக்கு மனசாட்சியும் இல்லை; மனித நேயமும் இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் விலக்கு தான்; அதற்கான ரகசியம் எங்களுக்குத் தான் தெரியும் என தந்தையும், மகனும் ஊர் ஊராக சென்று வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றினீர்களே… அப்போது தெரியவில்லையா இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என்று?” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், “திமுக அரசு நிறைவேற்றாத 373 வாக்குறுதிகள், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகள், முழுமையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகள் ஆகியவற்றின் பட்டியலை ஆவணமாகவே வெளியிட்டிருக்கிறேன். உண்மையாகவே திமுக அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் அவற்றின் பட்டியலையும், அவற்றால் பயனடைந்த மக்களின் விவரங்களையும் வெளியிடுங்கள். அதனடிப்படையில் மக்கள் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் விவாதம் நடத்துவோம். திமுக அரசின் பொய்களை அம்பலப்படுத்த நான் தயார், நீங்கள் சொன்னவை உண்மை என்பதை நிரூபிக்க நீங்கள் தயாரா?” எனவும் வினாயெழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க : தி.மு.க அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com